வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அரசாங்கம் அகற்றக்கூடாது எனவும் அகற்றக்கோரி போராடுபவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லங்கா மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“வடக்கு, கிழக்கில் 30 வருடகால போர் நிலவியது. உயிர் தியாகம் செய்தே படையினர் தாய்நாட்டை பாதுகாத்தனர். இந்நிலையில் வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறுகோரி போராட்டம் நடைபெறுகின்றது.
புலிகள் மற்றும் டயஸ்போராக்களுடன் தொடர்புபட்டவர்களே இவ்வாறு வலியுறுத்துகின்றனர். இது பாரதூரமான தவறாகும். மக்களை குழப்பும் வகையில் செயற்படுதல், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல் என்பன தவறாகும்.
எனவே, இவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் ஏற்பாடு உள்ளது.
ஹர்த்தால் தொடர்பில் அரசாங்கம் மௌனம் காக்கின்றது. வடக்கு, கிழக்கில் இருந்து எப்படி இராணுவ முகாம்களை அகற்ற முடியும்? முகாம்கள் அகற்றப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள காணிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
டயஸ்போரா மற்றும் பயங்கரவாதிகளின் கோரிக்கைக்கு அமைய இனவாதத்தை தூண்டும் வகையிலேயே இப்படியான விடயங்கள் இடம்பெறுகின்றன. ஆகவே இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருபவர்களை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.







