மன்னார் நகர சபையின் கடந்த மாதத்திற்கான கூட்டறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் சபையின் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கமைய கடந்த மாத கூட்டறிக்கை திருத்தங்களுடன் சமர்ப்பிக்கும் வகையில் நாளை (28.08) வரை சபை அமர்வை மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் ஒத்திவைத்தார்.
சபையின் 03 ஆவது அமர்வு மீண்டும் நாளை (28.08) காலை 09 மணிக்கு இடம்பெற உள்ளது.
மன்னார் நகர சபையின் 03 ஆவது அமர்வு இன்றைய தினம் (27.08) காலை 10 மணியளவில் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்பமானது.
இதன் போது அனைத்து உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.
இதன்போது கடந்த மாத கூட்டறிக்கை ஏற்கனவே உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில்,குறித்த கூட்டறிக்கையை சபையில் வாசிக்காது அதனை ஆதரித்து முன் மொழிந்து வழிமொழியுமாறு தவிசாளர் சபையில் தெரிவித்தார்.
இதனால் சபையில் நீண்ட நேரம் சர்ச்சை ஏற்பட்டதோடு,குறித்த கூட்டறிக்கையை சபையில் வாசித்து சரி பிழை பார்க்காமல் முன்மொழிய முடியாது என உறுப்பினர்கள் தெரிவித்தனர்
மேலும் குறித்த அறிக்கையில் பல்வேறு பிழைகள் மற்றும் திருத்தங்கள் காணப்படுவதாகவும் எனவே குறித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என உறுப்பினர்கள் கூறினர்
தொடர்ச்சியாக உறுப்பினர்கள் திருத்தங்களோடு,சபையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
இதனால் சபை அமர்வை தொடர்ச்சியாக நடத்திச் செல்ல முடியாத நிலை தவிசாளருக்கு ஏற்பட்டது.








