மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் குறித்து தீவிர விசாரணை (Video)

209
0
Spread the love

மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரணைகள் மிக வேகமாக இடம்பெற்று வருவதாக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார். மன்னாரில் இன்று(11.09). வியாழக்கிழமை  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் தெரிவித்த அவர்,

"மன்னார் நகர சபையினால் பல்வேறு விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. மன்னாரில் ஞாயிறு தினங்களில் காலை முதல் மதியம் 2 மணி வரை தனியார் வகுப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மன்னார் நகரத்தில் போக்கு வரத்தை இலகு படுத்துவதற்காக புதிய நடைமுறைகளை அமுல் படுத்துகின்றோம். போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக மன்னார் நகரத்தில் பஸ் போக்குவரத்து சபை மற்றும் தரிப்பிடத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றோம்.

பல இடங்களில் ஒரு வழிச்சாலையாகவும்,வாகனங்களைத் தரித்து நிறுத்துவதற்காக பல இடங்களை அடையாளப்படுத்தி இருக்கிறோம். மேலும் மன்னார் நகர சபைக்குட்பட்ட காணிகளை எல்லைப்படுத்தி அந்த காணிகளை துப்புரவு செய்வதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளோம். மேலும் மன்னார் நகரத்தில் எவ்வித மணல் அகழ்வுகளும் இடம்பெற அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நகரத்தைச் சுத்தமாக வைத்திருப்பதற்காகப்  பேருந்து நிலையத்தில் வெற்றிலை எச்சில் துப்புதல்,புகைத்தல்,முற்றாகத்  தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் சிறுநீர் கழித்தலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த விடையங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும் நகர சபையினால் குறித்த விடைங்கள் தொடர்பில்  நீதிமன்றத்தில்  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் கட்டுப்பாடுகளை விதிப்போம்.மக்கள் குறித்த சட்டங்களைக்  கடைபிடிக்க வேண்டும். மேலும் மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரணைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது. விசாரணைக் குழுக்களும் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஆளுநர் அலுவலகத்தில் இருந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமக்கு கடிதம் மூலம் தெரியப் படுத்தப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து குழு ஒன்று வருகை தந்து ஆவணங்களைப் பரிசீலித்துச் சென்றுள்ளனர்.

மிக விரைவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.மன்னார் நகர சபைக்கு ஏற்பட்ட நஷ்டம் மீள கிடைக்கப்பெறும். எனவே மக்கள் சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.எதிர் வரும் வாரம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மன்னார் நகரத்தில் அடாவடி தனத்துடன் மக்களின் போக்குவரத்து பாதைகளுக்கு இடையூறை ஏற்படுத்தி வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராகச்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.