ஜப்பான் பிரதமரை சந்தித்த ஜனாதிபதி

152
0
Spread the love

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஜப்பான் பிரதமர் இஷிபா ஷிகெருவுக்கும் இடையே டோக்கியோவில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள, இன்று(29.09) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த இரு தரப்பினரும், இரு நாடுகளுக்கும் இடையில் நிறுவப்பட்ட ஆழமானதும், விரிவாக்கப்பட்டதுமான கூட்டாண்மையின் கட்டமைப்பின் கீழ், பாதுகாப்பு, பொருளாதாரம், முதலீடு மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் தங்கள் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

சர்வதேச நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்துதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு மூலம் இலங்கையின் பொருளாதார மீட்சிப் பாதையை பிரதமர் இஷிபா பாராட்டியதுடன், இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ள திட்டத்தின் கீழ் பல்வேறு சீர்திருத்தங்களை தொடர்ந்து செயற்படுத்துவதும், கடன் மறுசீரமைப்பு செயன்முறையை முன்கூட்டியே முடிப்பதும் இலங்கைப் பொருளாதாரத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் மீட்டெடுக்க ஏதுவாக அமையும் என்பதை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர்.

கடன்சார் நிலைபேறானதன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டுக் கடன்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.

2024 ஆம் ஆண்டில், முன்னர் கைச்சாத்திடப்பட்ட 11 யென் கடன் திட்டங்களை மீண்டும் தொடங்குவது உட்பட, கடன் வழங்கிய ஏனைய நாடுகளைக்காட்டிலும் ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவிற்கு ஜனாதிபதி திஸாநாயக்க நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here