இன மத பேதங்களுக்கு அப்பால் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (03.10) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி அளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் உள்ளக விளையாட்டு அரங்கினை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அமைச்சர், "எமது நாட்டிலே கடந்த காலங்களிலே மக்களை பிரித்து ஆளுகை செய்த அடக்கி ஒடுக்கி ஆண்ட கலாச்சாரம் தான் இருந்து வந்தது .அதிலே மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை அரசியல்வாதிகள் அதனை தங்களுக்கு வாசியாக பயன்படுத்திக் கொண்டார்கள். யுத்தத்தினால் மக்கள் பிரச்சினைகளில் வாழ்ந்த போதும் அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
அந்த கசப்பான காலங்களில் நாங்கள் தீர்மானித்திருந்தோம் இன மத பேதங்களுக்கு அப்பால் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று.
நாங்கள் வெறுமனே வார்த்தைகளை சொல்பவர்கள் அல்ல அந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பவர்கள். நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதிகள் அல்ல வாக்குறுதி அளித்தால் அவற்றைச் செய்து முடிப்போம் இந்த வருடம் மாசி மாதம் அளவில் நான் இந்தக் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன் அப்போது இந்தக் கல்லூரிக்கு ஏதாவது ஒரு விடயத்தை செய்து தருவதாக கல்லூரி அதிபரிடம் வாக்குறுதி அளித்திருந்தேன்.
அதன் நிமித்தமாக இந்த பிரபலமான கல்லூரிக்கு உள்ளக விளையாட்டு அரங்கினை அமைத்து வழங்குவதற்காக அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்ததை விட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
குறித்த நிகழ்வில்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பிரேமச்சந்திரன்,மன்னார் மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் க.செல்வன், பிரதேச மற்றும் நகர சபை தவிசாளர்கள்,திணைக்களத் தலைவர்கள்,மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரிகள்,பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் அருட் பணியாளர்கள் மாணவர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









