ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகமவினால் இன்று (14.10) அனுமதி வழங்கப்பட்டது.
சந்தேக நபருக்கு தலா 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளும், 50,000 ரூபாய் ரொக்கப் பிணையும் வழங்கப்பட்டது.
அத்துடன் அவருக்கு நீதிமன்றம் பயணத் தடையும் விதித்தது.
சம்பவம் தொடர்பாக இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளால் சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை மற்றும் அவர் 70 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,
விசாரணை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததை அடுத்து, நீதவான் பிணை வழங்கினார்.
முந்தைய போராட்ட காலத்தின் போது அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு பெறுவதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, இலங்கை மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான செவனகல பகுதியில் உள்ள நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் உட்பட சேதமடைந்த அலுவலகத்துக்காக 88,50,000 ரூபாய் இழப்பீடு பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்
சஷீந்திர ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.






