கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்ட லேக் ஹவுஸ் நிறுவனத்தின் யாழ்ப்பாண கிளை அலுவலகம்

215
0
Spread the love

யாழ்ப்பாணம் ஸ்டான்லி ரோட் சிறாம்பியடி ஒழுங்கையில் அமைந்துள்ள லேக் ஹவுஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமானது நேற்றைய தினம் (18.10) சனிக்கிழமை காலை 7:45 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது வட மாகாணத்தில் உள்ள தினகரன் பத்திரிகையின் வாடிக்கையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு வசதி ஏற்படுத்தும் நோக்கில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமானது  யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் , "தினகரன் பத்திரிகையின் காரியாலயம் 2002 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இருந்தபோதிலும் யுத்தம் காரணமாக இந்த காரியாலயம் இடம் மாறி, மாறி இயங்கி வந்ததோடு இறுதியில் மூடப்பட்டிருந்தது.

இன்று இந்த இடத்திலே இயங்கிக் கொண்டிருந்த அலுவலகத்தை நாங்கள் மீண்டும் புதுப்பொலிவுடன் நவீன மயப்படுத்தி ஆரம்பித்து வைக்கின்றோம் .தினகரன் பத்திரிகையானது 93 வருட கால வரலாற்றைக் கொண்டது. டி ஆர் விஜயவர்தன, சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலே தினமின, டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகளை ஆரம்பித்த பின்னர் தமிழ் பேசும் மக்களுக்காக ஒரு பத்திரிகை இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தினகரன் பத்திரிகையை 1932 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்தார்.

அந்த பத்திரிகை இன்று வரை 94 வருடங்களாக இயங்கி வருகிறது. இது ஒரு அரசாங்க பத்திரிகையென்று பலராலும் கூறப்பட்டாலும் நடுநிலையாக இருந்து செய்திகளை வெளியிட்டு வருவதுடன், தமிழ் பேசும் மக்களின் குரலாகவும் இருந்து வருகின்றது.

இப்போது அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில் எங்களுக்கு நல்ல ஒரு நிர்வாகம் அமைந்திருக்கிறது.

புதிய அரசாங்கத்தின் கீழ் சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் இயங்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.

ஆகவே தொடர்ந்தும் இந்த பத்திரிகையை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம் விரைவில் நூற்றாண்டு விழாவை காண இருக்கின்றோம். முன்னொரு காலத்திலேயே வட மாகாணத்திலே தினகரன் பத்திரிகை என்றால் மிகவும் பிரபலமானது 25 வருடங்கள் தொடர்ச்சியாக சித்திரைப் புத்தாண்டு தினத்திலே மாட்டு வண்டிச் சவாரியை நடத்தி, வந்திருக்கிறது.

எனவே அடுத்த வருடத்தில் இருந்து மாட்டுவண்டிச் சவாரி மற்றும் சைக்கிள் ஓட்ட போட்டியினை புத்தாண்டு தினத்தில் மீண்டும்  நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அதற்கு வடமாகாண மக்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம் என்றார்." குறித்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், புத்த சாசன மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

அத்துடன் இவ்விழாவில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ பவானந்தராஜா, கே. இளங்குமரன், ஜே.ரஜீவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீ.ஆனந்த சங்கரி, வடமாகாண சபையின் தவிசாளரும் தமிழரசு கட்சியின் தலைவருமான சி வி கே சிவஞானம். யாழ்ப்பாண அரசாங்க அதிபர் எம். பிரதீபன், இந்து, பௌத்த சங்கத்தின் தலைவர் கே.மோகன்,யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.சுவாமிநாதன், இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் நாகராஜன் ராமசாமி , தியாகி அறக்கட்டளையின் தலைவர் வீ.தியாகேந்திரன், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர்,பூபாலசிங்கம் புத்தகசாலையின் பிரதான பத்திரிகை முகவர், வீ. மகாலிங்கம் கமல் பெரேரா உள்ளிட்ட கலாசார குழுவினர்,லேக் ஹவுஸ் உயர் பீட அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் .