போதைப்பொருள் நடவடிக்கை தொடர்பில் யாழில் 08 பேர் கைதாகியுள்ளனர்.
யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொண்ட நடவடிக்கையின் போது நேற்றுமுன்தினம் (19.11) கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட 8 பேரில் இருவர் நீண்டகாலமாக ஐஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கென அவர்கள் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வாடகைக்கு அறைகளையும் பெற்று தங்கியிருந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்களிடமிருந்து முறையே 6 கிராம் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஏனைய 6 பேரிடம் இருந்தும் சிறிதளவு ஐஸ் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







