மன்னார் பொது வைத்தியசாலையை மாகாண சபை நிர்வாகத்திலிருந்து மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அனுமதியைக் கோரியிருப்பதாக மன்னார் நகர சபை கூட்டத்தில் இக்கருத்து முன்வைக்கப்பட்டு இது விடயமாக பிரஸ்தாபிக்கப்பட்டது.
கடந்த திங்கள் கிழமை (17.11) மன்னார் நகர சபையின் மாதாந்த கூட்டம் நடைபெற்றபோது இது தொடர்பாக மன்னார் நகர சபை தவிசாளர் ஏ.பி.டீ.டீ.பி.வசந்தன் இங்கு தனது கருத்தை முன்வைக்கையில்,
“மன்னார் பொது வைத்தியசாலையை மன்னார் மாவட்ட அனைத்து மக்களும் பயன்படுத்தும் கட்டாயத் தேவையாக இருந்து வருகின்றது.
ஆகவே இங்கு அதிகமான தாதியர் வைத்தியர்கள் அத்துடன் ஏனைய வளங்கள் தேவைப்படும் நிலையும் இருந்து வருகின்றது.
யாழ் வைத்தியசாலையை நோக்கும்போது அது மத்திய அரசின் கீழ் இயங்கி வருவதால் அது சகல வசதிகளுடன் செயற்பட்டு வருகின்றது.
ஆனால் மன்னார் வைத்தியசாலையில் வசதிகள் அற்ற நிலை காணப்படுவதால் நோயாளிகளின் சிறிய தேவைகளுக்கும் யாழ் வைத்தியசாலையை நோக்கியே அனுப்பப்பட்டு வருகின்றது.
மன்னாரிலிருந்து யாழ் நோக்கி நோயாளிகளை அழைத்துச் செல்லும்போது இடையில் மரணங்கள் ஏற்பட்டு வரும் அபாயமும் நிலவி வருகின்றது.
இந்த நிலையில்தான் நாம் மன்னார் பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வரும்போது மேற்கூறப்பட்ட குறைகள் நீங்கக்கூடிய தன்மை ஏற்படும் என நான் எனது தனிப்பட்ட கருத்தாக இதை முன்வைக்கின்றேன்.
மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் இது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெறும்போது எமது உறுப்பினர்கள் யாவரும் கலந்து கொண்டு இது தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட இருந்ததாகவும் ஆனால் அவைகள் தற்பொழுது 170 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும்
மாகாண சபை கீழ் இருக்கும் வைத்தியசாலைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யும் முறைமையே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசிலிருந்து நிதி மாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யும்போது ஒரு குறிப்பிட்ட நிதியையே வழங்கின்றது. இவை மாகாணத்தின் கீழ் இருக்கும் வைத்தியசாலைகளுக்கு பகிரும்போது மன்னார் வைத்திசாலைக்கு மிக சொற்ப நிதியே வந்தடைகிறது.
ஆனால் மத்திய அரசிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யும்போது அது நேரடியாகவே குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு சென்றடைகின்றது.
இதனால்தான் மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல வேண்டும் என நான் எனது கருத்தை இங்கு முன் வைக்கின்றேன்.
இருந்தும் இந்த சபையில் இது தொடர்பாக எதிரும் புதிருமான கருத்துக்கள் இருப்பதால் உறுப்பினர்கள் இது தொடர்பாக சிந்தித்து அடுத்த அமர்வின்போது இதற்கான தீர்வை எடுத்துக் கொள்வோம் என இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் பொது வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வதற்கு மன்னார் உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதி கோரியதிற்கு அமையவே இக்கருத்து இங்கு முன்சைக்கப்பட்டதும் குறிப்பிடக்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)







