டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக
செயற்படுத்தப்பட்டுள்ள Rebuilding Sri lanka திட்டத்திற்கு, 1893 மில்லியன் ரூபா நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பது
குறித்து இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைமையில் அனைத்து
காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் கலந்துரையாடலொன்று நடைபெற்றதாகவும்
நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்த சூழ்நிலையில் சேதமடைந்த வர்த்தகங்கள், சொத்துக்கள் மற்றும் உயிர்களுக்கு உடனடி
இழப்பீடு வழங்குவதற்கான பொறிமுறையை அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் ஏற்கனவே
முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி,சொத்துக்களுக்கு ஏற்பட்ட சிறிய சேதங்களுக்கு உடனடி இழப்பீடு வழங்கும் நடவடிக்கை
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாரிய சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான தகவல்களைச்
சேகரித்த பின்னர் இழப்பீடு வழங்கப்படும் என்றும், அதுவரை இழப்பீட்டின் ஒரு பகுதி உடனடியாக வழங்கப்படும்
என்றும் காப்புறுதி நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மேலும் தெரிவித்தார்.







