வட மாகாணத்திற்கான ஐந்து வருட சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை தயாரிக்கும் பணியின் இறுதி செயலமர்வு கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள ரீச்சா பண்ணை வளாகத்தில் நடைபெற்றது.
வட மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரண்டுநாள் செயலமர்வு, சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்காற்றும் முக்கிய பங்குதாரர்களின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் அனுபவங்களை ஒருங்கிணைந்த முறையில் பெறும் நோக்குடன் நடத்தப்பட்டது.
குறித்த செயலமர்வு நேற்று (18.12) வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி, இன்று (19.12) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியுடன் நிறைவு பெற்றது.
வவுனியா பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்வி பீடத்தின் பீடாதிபதியும் பேராசிரியருமான வை. நந்தகோபன் வளவாளராக இதில் கலந்து கொண்டார்.
இந்த செயலமர்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க. கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சதீசன் மஞ்சுளா வட மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் பி. யசோதரா, சுற்றுலா பணியகத்தின் தவிசாளர் அ. பத்திநாதன், சுற்றுலா பணியக அதிகாரிகள், வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபை தவிசாளர்கள்,தொல்லியல் திணைகள் அதிகாரிகள்,வன ஜீவராசிகள் திணைகள அதிகாரிகள்,கரையோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள்,திட்டமிடற் பணிப்பாளர்கள் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள், சித்த மருத்துவ வைத்தியர் வவுனியா பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள், ருகுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்மிக்க லியனகே, அழைக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.
வட மாகாணத்திற்கான ஐந்து வருட சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை தயாரிப்பதற்கான ஆலோசனைச் சேவைகளை வவுனியா பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்வி பீடம் வழங்கி வருவதுடன், இத்திட்டத்திற்காக வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் பங்குதாரர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், இந்த இறுதி செயலமர்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.








