கண்டி, வத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிராவன பகுதியில் இன்று (13) காலை சிறுமி ஒருவர் முச்சக்கர வண்டியில் அழைத்து வரப்பட்டு வீதியில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்து வயதிற்குட்பட்ட அந்தச் சிறுமி, தனது பெயர் ஆயிஷா எனவும் தந்தையின் பெயர் ராசிக் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் உடலில் தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கான காயங்கள் மற்றும் அடையாளங்கள் காணப்பட்டுள்ளதால், விரிவான மருத்துவ அறிக்கையைப் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர்களே அவரை கைவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிறுமி தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் உடனடியாக வத்தேகம பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்







