கிளிநொச்சி மாவட்டத்தில் கல்மடுநகர்–சம்புகுளம் பிரதான வீதி மற்றும் மாயவனூர் பகுதியில் உள்ள வீதிகளை காபெட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர்–சம்புகுளம் மூலிகைப் பண்ணைக்குச் செல்லும் சுமார் 1.3 கிலோமீற்றர் நீளமான வீதி, கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 60 மில்லியன் ரூபாய் செலவில் காபெட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் இன்று இடம்பெற்றதுடன், பணிகள் சுமார் மூன்று மாதங்களுக்குள் நிறைவுசெய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாயவனூர் பகுதியில் மேலும் 55 மில்லியன் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் நீளமான காபெட் வீதி புனரமைப்புப் பணிகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இன்பராஜ் நளாயினி தலைமையில் நடைபெற்றதுடன், பிரதம விருந்தினராக தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய மருங்கன் மோகன், கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பயணத்தில் சம்புகுளம் கிராம மக்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் தொடர்பில் கேட்டறிவதற்காக, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் உயர்மட்டக் குழுவினர் சம்புகுளம் கிராமத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் சம்புகுளம் மக்கள் பெருமளவில் பங்கேற்று வந்துள்ளதாகவும், தேசிய மக்கள் சக்திக்கும் சம்புகுளம் மக்களுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் தொடர்பு தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், நீர்ப்பாசனப் பொறியியலாளர், கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







