வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

222
0
Spread the love

மன்னார் 54 ஆம் காலாட்படை பிரிவின் ஏற்பாட்டில் வைத்திய கலாநிதி ஜினஞ்சலா சாணிக்கா விஜய குணசேகர மற்றும் வைத்திய கலாநிதி தெருஷி தில்ஹாரா பெரேராவின் நிதிப் பங்களிப்புடன் வசதி குறைந்த, பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (22.12) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில்,
மன்னார் கரிசல் அலாவுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் மாணவர்கள், மன்னார் சாந்திபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் நகர சபை ஊழியர்களின் பிள்ளைகள் என 142 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய வைத்திய கலாநிதி தெருஷி தில்ஹாரா பெரேரா தெரிவிக்கையில்,

“கல்வியின் முக்கியத்துவம், இரக்கம் மற்றும் சமூக நம்பிக்கை கொண்ட மக்களால் சூழப்பட்டு இன்று இந்த இடத்தில் நிற்பதில் பெருமை கொள்கிறேன்.

இன்றைய இந்த நிகழ்வானது புத்தகங்களை வழங்குவது மட்டுமல்ல மாறாக கதவுகளை திறப்பது .கற்றுக் கொள்ளவும் செழித்தோங்கவும் வாய்ப்பு தேடுகின்ற சிறுவர்களின் நம்பிக்கையை தூண்டுவதான ஒரு நிகழ்வு.

எனது தாயார் ஜினஞ்சலா சாணிக்கா விஜய குணசேகர தனது நேரத்தையும் தனது சக்தியையும் இலங்கையில் உதவி தேவைப்படுகின்ற மக்களுக்காக அர்ப்பணித்ததை சிறு வயது முதலே பார்த்திருக்கின்றேன்.

சில கடினமான சூழ்நிலைகளில் தவித்திருந்த குடும்பங்களை மேம்படுத்துவதற்காக அவர் எவ்வாறு நன்கொடைகளை வழங்கினார் என்பது எனக்கு நன்கு நினைவிருக்கிறது.

மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய அந்த மாற்றம் எனது தாயின் முகத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
அந்த நினைவுகள் எனக்குள்ளும் நிலைத்து விட்டது.

இரக்கம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் அது பிரமாண்டமானதாக இருக்க வேண்டியதில்லை. அது உண்மையானதாக இருந்தால் போதுமானது என்பதை அந்த நினைவுகள் எனக்கு உணர்த்தின.

எனது தாயின் இரக்கத்தை செயலில் கண்ட நான் அதே விடயத்தை செய்வதற்கு தூண்டப்பட்டேன்.

புத்தகங்களை அணுக முடியாத சிறுவர்களுக்கு அவற்றை நன்கொடையாக வழங்குவது என்ற இந்த திட்டம் எனது தாயின் பரந்த சிந்தனை.

இங்கு வழங்கப்படும் ஒவ்வொரு புத்தகமும் நம்பிக்கையின் விதையை குறிக்கிறது. ஒரு குழந்தையை கனவு காண தூண்டுகிறது. ஒருவரின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய ஒரு பாடமாகிறது.

ஆனால் அர்ப்பணிப்புள்ள பலரின் ஆதரவின்றி இவை எதுவும் சாத்தியமற்றதாகும் .

அந்த வகையில் இந்நிகழ்வினை ஒருங்கிணைக்க உதவி புரிந்த இலங்கை ராணுவத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றேன்.

அவர்களது ஒழுங்கமைப்பு அர்ப்பணிப்பு மற்றும் அயராத உதவிகள் இத்திட்டத்தை சாத்தியமாக்கியது மட்டுமல்லாது இந்நிகழ்வினை சரியான முறையில் நடத்துவதற்கு உதவி புரிந்தது.
தமது கடமைகளுக்கு அப்பால் சமூகங்களை வலுப்படுத்தும் செயல்கள் மூலம் அவர்கள் தேசத்திற்கு சேவை செய்வதை பார்த்து மனம் பூரிக்கின்றது. அந்த வகையில் இந்த முயற்சியில் பங்களித்த மேஜர் ஜெனரல் சந்திர அபயகோன் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து நிற்கிறேன் என்றார்.

குறித்த நிகழ்வில், விருந்தினர்களாக 54 ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திர அபயகோன்,
வைத்திய கலாநிதி ஜினஞ்சலா சாணிக்கா விஜேகுணசேகர,
வைத்திய கலாநிதி தெருஷி தில்ஹாரா பெரேரா,
543 ஆம் காலாட்படை பிரிவின் தளபதி கேணல் ரமிந்து ஹசந்த.
4வது விஜயபாகு காலாட்படை பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் சந்திம லியனகே,
மன்னார்,நகர சபை தவிசாளர் டேனியல் வசந்தன், சாந்திபுரம் அரசினர் தமிழ் கலவன் மற்றும் கரிசல், அலாவுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர்கள் மாணவர்கள், பெற்றோர்கள்,மற்றும் நகர சபை ஊழியர்கள் என்ன பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை,இலங்கையில் பல்வேறு சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் வைத்திய கலாநிதி ஜினஞ்சலா சாணிக்கா விஜயகுணசேகரவினால் கடந்த ஐப்பசி மாதம் 5ஆம் திகதி மன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பாடசாலை ஒன்றுக்கு ரூபா 550,000.00பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பொன்று வழங்கி வைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here