பண்டிகை காலத்தைக் கொண்டாடும் பொதுமக்கள், அறிமுகமில்லாத நீர்நிலைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள ஆபத்தான மாற்றங்களை சுட்டிக்காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (24.12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே சமூக மருத்துவ நிபுணர் சமித்த சிறிதுங்க இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அத்துடன் அண்மைய வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நாட்டின் பல நீர்நிலைகளின் ஆழம், கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் தன்மை பாரியளவில் மாறியுள்ளன.
வெளிப்பார்வைக்கு அமைதியாகத் தெரிந்தாலும், நீருக்கு அடியில் ஆபத்தான குழிகள் அல்லது மணல் மேடுகள் உருவாகியிருக்க வாய்ப்புள்ளது.
இதனால் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதற்கு அல்லது குளிப்பதற்கு முன்னர், அந்த பிரதேசம் குறித்து நன்கு தெரிந்த உள்ளூர்வாசிகளிடம் ஆலோசனை பெறுவது
மிகவும் அவசியமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வீதி விபத்துகள் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் வாகனங்களை செலுத்துவோர் தங்கள் வாகனங்கள் சரியான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துமாறும், மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.







