சீப்புக்குளம் பகுதியில் காட்டுயானையை தீயிட்டு எரித்து துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (24) மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் இன்று (21.12) ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் செல்வி லக்மாலி ஹெட்டியாராச்சி உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்களின் எதிர்ப்பு ஏற்படக்கூடும் என்பதால் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் சிக்கிய காட்டுயானையை தீயிட்டு எரித்து துன்புறுத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மிஹிந்தலை பொலிஸாரால் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
துன்புறுத்தலுக்கு உள்ளான குறித்த காட்டுயானை சில நாட்களுக்கு முன்னர் சீப்புக்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. யானையின் மரணம் குறித்து நடத்தப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புடன், தீயினால் ஏற்பட்ட அதிர்ச்சியே மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42, 48 மற்றும் 50 வயதுடைய அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







