மன்னாரில் நடைபெற உள்ள “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் பிரம்மாண்ட நிகழ்வு

160
0
Spread the love

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் பிரமாண்டமான நிகழ்வு ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை (29.12) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற உள்ளது .

இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

“தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய நிகழ்ச்சித் திட்டமான க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் இறுதி நிகழ்வாக மன்னாரிலே பிரமாண்டமான ஒரு நடமாடும் சேவை நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற உள்ளது.
இந் நிகழ்வின்போது தேசிய நிகழ்ச்சி திட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில்,தூய்மையான இலங்கை பிரஜா சக்தி,தேசிய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்,போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை போன்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .

அதனோடு இணைந்த வகையிலே ,இரத்ததான முகாம், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாம் போன்றவை இடம் பெற உள்ளது.

அதனை விட எமது பாரம்பரிய வைத்தியத்தினை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலே ஆயுர்வேத மருத்துவத்தையும் அந்த நடமாடும் சேவையிலே நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.

மக்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெறலாம். அதனை விடவும் பிறப்பு இறப்பு,மற்றும் திருமணப் பதிவினை இதுவரை மேற்கொள்ளாதவர்கள் அதனை பதிவு செய்து அன்றைய தினமே அவற்றைப் பெற்றுக் கொள்ளும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதை வேளை தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் மற்றும் விண்ணப்பித்தும் பெற்றுக் கொள்ளாதவர்கள் அன்றைய தினத்தில் அதனை பெற்றுக் கொள்ள முடியும்.

மன்னார் மாவட்டத்திலே தீர்க்கப்படாத காணி பிரச்சினைகள் வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் தலைமையில் தீர்க்கப்பட இருக்கிறது.

அத்தோடு மன்னார் மாவட்டத்திலே வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் பல இளைஞர் யுவதிகளுக்கு மூன்றாம் நிலை கல்வி தொடர்பான விழிப்புணர்வு வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டங்கள் ஒழுங்க மைக்கப்பட்டுள்ளது, அந்த வகையிலே தொழில்நுட்ப கல்லூரி திறந்த பல்கலைக்கழகம், நைற்றா, VTA, ATI போன்ற மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்கள் நேரடியாக வருகை தந்து விழிப்பூட்டல் நிகழ்ச்சிகளை மேற்கொள்வதோடு தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்க இருக்கின்றது.

அத்தோடு மன்னாரில் உள்ள ஜேஜே(JJ Mill) ஆடைத்தொழிற்சாலை 600 பேருக்கும் அதேபோன்று கீல்ஸ்(Keels) நிறுவனம் 400 பேருக்கும், கூல்மேன் (Coolman) நிறுவனம் 150 பேருக்கும், கார்கில்ஸ்(Cargils food city) நிறுவனம் 5 பேருக்கும் அன்றைய தினத்தில்வேலை வாய்ப்பினை வழங்கத் தயாராக உள்ளது.
எனவே மன்னார் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு இது ஓர் அரிய சந்தர்ப்பம்.
மேலும், அஸ்வெசும கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் அன்றைய தினத்தில் தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம்,

அத்தோடு விவசாயம் கால்நடை, மீன்பிடி,தென்னை பயிற் செய்கை, கைத்தொழில் முயற்சி யான்மை போன்ற சேவைகளுக்காகவும் தனித்தனி கருமபீடங்கள் அமைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட உள்ளன.

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உரிய இழப்பீடுகளும் அன்றைய தினத்தில் வழங்கப்பட உள்ளது.

அத்தோடு மன்னார் மாவட்டத்தின் பாரம்பரியங்களை நிலை நிறுத்தும் விதமாக கலாச்சார நிகழ்வுகளும் அன்றைய தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினத்தில் தேவைப்பாடு உடைய மக்கள் கலந்து கொண்டு தங்களுக்குரிய சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here