மன்னார் மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வானது 542 வது காலாட்படைப் பிரிவின் ஏற்பாட்டில், நேற்றைய தினம் (09.01) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
54 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபேகோன் அவர்களின் வழிகாட்டுதலில் 542 வது காலாட்படைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில்
மன்னார் மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட ஐந்து பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பாடசாலை கற்றல் உபகரணங்கள், சீருடைகள், மற்றும் பிற அத்தியாவசிய ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு பாடசாலை நிர்வாகத் தேவைகளுக்கான உபகரணங்கள் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந் நன்கொடை நிகழ்வு இரண்டு கட்டங்களாக MN/தம்பனைக்குளம் தமிழ்க்கலவன் பாடசாலை, மற்றும் MN/இலந்தைமோட்டை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றது.
54வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க, குருநாகல், மலியதேவ பெண்கள் கல்லூரியின் அதிபர் திருமதி நிரோதா அபேவிக்ரமவின் நிதியுதவி, மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்களின் ஆதரவுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை 4 வது பட்டாலியன் கஜபா படைப்பிரிவு மற்றும் 8 வது விஜயபாகு காலாட்படைப் பிரிவு இணைந்து மேற்கொண்டதுடன், ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பை 542 வது காலாட்படையணியின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன்ட் கேணல் WAND ஜெயசுந்தர மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக 54 வது காலாட்படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபேகோன் கலந்து கொண்டார். மேலும், 542 வது காலாட்படை பிரிவின் தளபதி பிரிகேடியர் ஏ.ஆர்.டபிள்யூ.சி. அசுரசிங்க மற்றும் பல மூத்த இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் நாட்டை உலுக்கிய பேரிடரின் பின்னர், தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவத்தினர் இவ்வாறான உதவித்தட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவது சுட்டிக்காட்டத்தக்கது.









