மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த மூத்த கலைஞர் றோசாயல் அந்தோணி ரெவெல் அரசாங்கத்தினால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் அதி உயர் விருதான கலாபூசணம் விருதினை கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி பெற்றுக் கொண்டார்.
வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே கலை வளர்த்த ரோஸாயில் அந்தோணி ரெவல் பல விருதுகளுக்கு சொந்தக்காரன் ஆவார்.’ செழுங்கலைவித்தகர்’
‘கலைச்சுவதம்’ ‘மன் கலைச்சுரபி’ ‘காந்தக் குரலோன்’ எனப் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதி வஸ்தியான் ரோஸா யல் ரெவலுக்கும் லூயிஸம்மா பீரிஸ் என்பவருக்கும் நான்காவது மகனாக பிறந்தார். இவருடைய பாட்டனார் ஒரு பாரம்பரிய கூத்து கலைஞராக இருந்தமையால் சிறுவயதிலிருந்தே கூத்துக் கலைகளை கற்கும் வாய்ப்பு இவருக்கு இருந்தது.அன்றிலிருந்தே இவரது கலைப்பயணம் ஆரம்பமாகியது.கர்நாடக சங்கீதம் மற்றும் பக்தி பாடல்களை கணீரென்று பாடுகின்ற குரல் வளம் இவரிடம் இருந்தமையால் சிறுவயதிலிருந்தே பாடசாலை நிகழ்வுகள் மற்றும் கிராமிய பொது நிகழ்வுகள் பாடல்களைப் பாடி கூத்துக்கள் நடித்து தனது குரல் வளத்தையும் நடிப்பு திறமையும் இசையுலகுக்கு காட்டி இருந்தார் 15 வயதில் இருந்தே வங்காலை வளர்கலை மன்றத்திலும் ஆலய பாடல் குழாமிலும் இணைந்து கொண்டு பாடல்களை பாடி வந்தார்.
அன்றிலிருந்து இன்று வரை பல நாடகங்கள் கூத்துக்கள் எனப் பாரம்பரிய கலை வடிவங்களில் முன்னணி நடிகராகவும் பாடகராகவும் பல விருதுகளைப் பெற்று திகழ்ந்த இவர் ஆலய திருவிழாக்களில் பக்தி பாடல்களையும் தானே இயற்றி இசையமைத்தும் பாடி வந்தார்.
1968 ஆம் ஆண்டில் வங்காலை ‘வளர்கலை’ மன்றத்தினால் முதன் முதலாக மேடையற்றப்பட்ட பாஞ்சாலி சபதம்’ என்ற நாடகத்தில் துச்சாதனனாக வேடமிட்டு மிகவும் சிறப்பான முறையில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்நாடகம் மட்டக்களப்பிலே பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் பார்வையிலே அரங்கேற்றப்பட்டு அதிலே பல பாராட்டுகளையும் பரிசில்களையும் பெற்றுக் கொண்டது. பின்னர் 1969 இல் ‘இலங்கேசன்’ என்ற நாட்டுக்கூத்தில் சுக்ரீவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.1976ல் ‘வாலி’ நாடகத்தில் இலக்குமணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன் வங்காலைக் கிராமத்தின் புகழ் பூத்த நாடகமான ‘ஈரிரவு’ நாட்டுக் கூத்து, மரியை சித்தாள் வாசாப்பு இரண்டாம் வரவில் தமிழ் ராயனாக நடித்திருந்தார்,1971 இல் வளர்கலை மன்றத்தால் மேடையற்றப்பட்ட ‘ஈழம் கண்ட சோழன்’ அண்ணாவி மரபு கூத்தில் பின்னணிப் பாடகராக பங்களிப்பு செய்தார் .அத்தோடு ‘தாவீதும் கோலியாத்தும்’ என்ற நாடகத்தில் பிரதான பாத்திரம் ஏற்று தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
மன்னார் மாவட்டத்தின் வரலாற்றில் பொது நாடகமாக கருதப்படும் ‘சந்தோமையார் வாசாப்பில் சாடை சொல்பவனாக நடித்திருந்தார்.1997 இல் திருப்பாடுகளின் காட்சியில் பின்னணிப் பாடகனாக பாடல்களை பாடி இருக்கின்றார். அத்துடன் மூவி ராசாக்கள் நாடகத்திலும் பின்னணி பாடகனாக பங்களிப்புச் செய்தார் அவ்வாறாக இவருடைய இயல் இசை நாடகப் பணிகள் நகர்ந்து கொண்டிருக்கும்போது நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இவர் பெற்ற கலைச் சான்றிதழ்கள் ஆவணங்கள், அனைத்தும் 1989 ஆம் ஆண்டு அழிவடைந்தது .1997 ஆம் ஆண்டிற்கு பின்னர் பெற்ற கலை ஆவணங்கள் மாத்திரமே இவர் வசம் உள்ளது. உடல் உபாதைகள் பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் தனது திறமையை உலகுக்கு காட்டியதுடன் வங்காலைக் கிராமத்தின் ஒரு கலைப் பொக்கிஷமாக இன்று வரை திகழும் இவரை வாழும்போதே வாழ்த்தி மகிழ்வோம்.








