​மன்னாருக்கு வருகை தரும் புலம்பெயர் பறவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விசேட நிகழ்வு

173
0
Spread the love

​மன்னார் பகுதிக்கு ஆண்டுதோறும் வருகை தரும் புலம்பெயர் பறவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது குறித்து மக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் விசேட நிகழ்ச்சி ஒன்று நேற்றைய தினம் (01.02) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

​மன்னார் பறவைகள் கழகத்தினால் (Mannar Bird Club) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ‘பறவைகள் அவதானிப்பு மற்றும் வர்ணம் தீட்டுதல்’ நிகழ்ச்சி, மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள விடத்தல்தீவு இயற்கை சரணாலயத்திற்கு உட்பட்ட கோரைக்குளம் தங்குநிலப்பகுதியில் இடம்பெற்றது.

​காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், சுற்றுலாத்துறை சார் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பறவைகளை அவதானித்ததுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த பறவைகள் அவதானிப்பு நிலையத்தில் இடம்பெற்ற வர்ணம் தீட்டும் செயற்பாடுகளிலும் பங்கேற்றனர்.

​இந்நிகழ்ச்சி குறித்து மன்னார் பறவைகள் கழகத்தின் செயலாளர் கலாநிதி கயோமினி பனாகொட கருத்துத் தெரிவிக்கையில்,

​”கோரைக்குளம் வலயமானது புலம்பெயர் பறவைகளுக்கு மட்டுமன்றி, உள்நாட்டுப் பறவைகளுக்கும் ஆண்டு முழுவதும் மிக முக்கியமான புகலிடமாகும். குறிப்பாக குளம் வற்றும் காலங்களில் குளத்தின் அடிப்பகுதியில் நீர்ப்பறவைகள் பெருமளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் இலங்கையில் பறவை அவதானிப்புக்கு இது ஒரு சிறந்த தளமாக மாறியுள்ளது.”

​எனினும், இப்பகுதி தற்போது பெரும் சவால்களை எதிர்நோக்கிவருகின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் குளத்தைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பில் சுமார் 25 சதவீதமான நிலம் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
​வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வலயத்திற்குள் இந்தப் பிரதேசம் இருக்கின்றபோதிலும், சட்டவிரோத வேலிகள் அமைக்கப்பட்டு நிலங்கள் அபகரிக்கப்படுவது கவலையளிக்கின்றது.

​இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தவும், எஞ்சியுள்ள பறவைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் உள்ளூர் சமூகத்தினரை ஒன்றிணைத்து இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம் என கலாநிதி கயோமினி பனகொட மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here