மன்னார் மாவட்ட செயலகத்தில் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்ட சுதந்திர தின விழா

183
0
Spread the love

நாடு தன்னிறைவு பெற வேண்டும், அபிவிருத்தி அடைய வேண்டும், வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என மன்னார் மாவட்ட செயலாளர் க. கனகேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று (04.02) புதன்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையின் 78வது சுதந்திர தின விழா நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சுதந்திரம் அடைந்து 78வது ஆண்டினை நாம் இன்று தேசிய அளவில் வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த அரசாங்கமானது
“வலுவான தேசம் – வளர்ச்சியான வாழ்வு” என்ற தேசிய கொள்கையின் கீழ், கிராம அபிவிருத்தி, க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் மற்றும் சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குதல் ஆகிய மூன்று முக்கிய துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கிராமங்களை மையமாகக் கொண்டு உற்பத்தி, மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக ரூ.25 பில்லியன் அளவிலான நிதி சனத்தொகை அடிப்படையில் கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், பொருளாதார இடைவெளிகளை குறைத்தல் மற்றும் சிறு தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்கள் அடையப்படுகின்றன.

மேலும், மாவட்டத்திற்காக ரூ.4 கோடிக்கு மேற்பட்ட நிதி ஒதுக்கப்பட்டு, அதன் மூலம் மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக ஒழுக்கம் மற்றும் சட்ட விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு திட்டங்கள் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துச் சொல்லவும், சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்கவும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அரச அலுவலகங்களில் சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் முன்வைக்கும் முறையீடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக, மன்னார் மாவட்ட செயலகத்தில் உள் விவகார அலகு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி, தங்களது அடையாளம் வெளிப்படாமல் முறையீடுகளை சமர்ப்பிக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு,

இளைஞர்களை மையமாகக் கொண்டு செயற்படும் திட்டங்களும் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேவையான கட்டமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு, கடந்த ஆண்டிலிருந்தே பல பகுதிகளில் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கூடுதலாக பல பிரதேசங்களில் இத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அரச சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளும் வகையில், மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே அரசாங்கம் முன்னெடுத்து வரும் இந்த அனைத்து திட்டங்களையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு, மாவட்ட செயலக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒருமித்துப் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்

குறித்த நிகழ்வில்
மன்னார் மாவட்டச் செயலகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டதுடன் சுதந்திர தின நினைவாக மாவட்டச் செயலக வளாகத்துக்குள் மர நடுகைகளையும் மேற்கொண்டனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here