யாழ்ப்பாணம், நயினாதீவு கடற்பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகொன்று இன்று(16)மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேரும் கடற்படையினர் மற்றும் அப்பகுதி மீனவர்களின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவுக்கான இறுதிப் பிரதான போக்குவரத்துப் படகு சேவை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறிகட்டுவான் இறங்குதுறையில் காத்திருந்த சில பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த சிறியரகப் படகு மாலை சுமார் 3.30 மணியளவில் நயினாதீவிலிருந்து புறப்பட்டுள்ளது.
படகு புறப்பட்டு சுமார் 15 நிமிடங்களுக்குப் பின்னர், மாலை 3.45 மணியளவில் நயினாதீவு கடற்பகுதியில் திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படகு கவிழ்ந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் கடற்படையினரும் அப்பகுதி மீனவர்களும் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது படகில் பயணித்த 10 பேரும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.






