ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிகள் அதிகரிப்பு

187
0
Spread the love

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் மருத்துவ உதவித் தொகையை அதிகரிக்க அதன் ஆளுநர் சபை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட 07 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர் சபை இன்று (10) முற்பகல் கூடிய போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கட்டணங்களைத் திருத்தம் செய்து அந்த உதவித் தொகையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உதவிகளைப் பெறுவதில் உள்ள கடுமையான நிபந்தனைகளைத் தளர்த்தி, சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறும் நோயாளர்கள் உதவியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அந்த முறைமையை எளிமையாக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகக் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு, ஒரு இலட்சம் ரூபாய் (ரூ. 100,000) உதவித் தொகையை ஒரே தடவையில் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் இதய சத்திரசிகிச்சை மற்றும் கண்புரை சத்திரசிகிச்சைகளுக்காகக் காணப்படும் நீண்ட வரிசைகளைக் குறைப்பதற்கு, ஜனாதிபதி நிதியத்தின் தலையீட்டுடன் துரித வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் ஜனாதிபதி நிதியத்தின் நிதி நிலைமை வரலாற்றில் இல்லாதவாறு உயர்ந்த மட்டத்தை அடைந்துள்ள நிலையில், நிதியத்தின் ஊடாக உதவி பெறுபவர்களின் விபரங்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் மட்டத்தில் இணையத்தளத்தில் வெளியிட்டு, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here