சமூக மட்ட பெண்கள் அமைப்புகள் அரசாங்கத்திடம் கோரிக்கை

238
0
Spread the love

எதிர்வரும் 12-ஆம் தேதி நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகைாரசபை சட்டம் 2025 பாராளுமன்றத்தில் விவாத்திக்கப்படவுள்ள நிலையில் சமூக மட்டத்தில் பெண்களால் உருவாக்கி செயல்படுத்தப்பட்டுவரும் சிறு சேமிப்பு குழுக்களை இந்த சட்டத்திற்குள் உள்ளடக்க வேண்டாம் என சமூக மட்ட பெண்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பிலான மகஜர் ஒன்றையும் நேற்றைய தினம் (11.02)புதன்கிழமை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரனிடம் அவர்களிடம் கையளித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி மகாலட்சுமி நாகசுந்தரம் தெரிவிக்கையில்,

12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாத்திக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகைாரசபைச் சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம் . சட்ட ரீதியற்ற பணக் கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தும் வகையில் அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்த சட்டம் பாராட்டுக்குரியது. கடந்த காலங்களில் நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் கடன்களை பெற்று அதனை திரும்பச் செலுத்த முடியாமல் பெண்கள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதனால் பல குடும்பங்கள் பிரிந்து இருக்கின்றன. பல பெண்கள் நோயாளிகளாக ஆகியுள்ளார்கள்.

அதே வேளையில் கிராம மட்டத்தில் பெண்களாக ஒன்றிணைந்து சிறு சேமிப்பு குழுக்களை உருவாக்கி தங்களுக்குள்ளேயே பணத்தை கையாண்டு, கடன்களை சுழற்சி முறையில் பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நுண் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்கிறார்கள்.

எனவே இந்த சிறு சேமிப்பு குழுக்களையும் குறித்த சட்டத்திற்குள் கொண்டு வந்து பதிவு செய்து அதன் மூலம் அவர்களை கட்டுப்படுத்தினால் அவர்கள் இந்த குழுக்களை ஆரம்பித்து தன்னிச்சையாக இயங்கி வந்த நோக்கம் முறியடிக்கப்படும்.

எனவே இலங்கையில் உள்ள எல்லா சிறு சேமிப்பு குழுக்களும் தாங்களாகவே தன்னிச்சையாக செயற்பட வேண்டும் என்பதற்காக குறித்த சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டிய விடயங்களை முன்மொழிந்து மகஜர் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனிடம் கையளித்துள்ளோம்.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துரைப்பதாக அவர் எங்களுக்கு வாக்குறுதியளித்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

https://www.facebook.com/share/v/1Kqwyu5zJv/

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here