ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பு காரணமாகவே பாகிஸ்தான் அணி இலங்கை வந்தது

146
0
Spread the love

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாகிஸ்தான் பிரதமருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்தே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இப்போட்டியில் பங்கேற்கத் தீர்மானித்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சையத் மொஹ்சின் ரஸா நக்வி தெரிவித்தார்.

இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, பாகிஸ்தான் பிரதமரின் சார்பில் ஜனாதிபதிக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (15.02) நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்காக, பாகிஸ்தான் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் சையத் மொஹ்சின் ரஸா நக்வி, வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வந்திருந்தனர்.

இக்குழுவினர் இன்று (16.02) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தமது கிரிக்கெட் அணி உள்ளிட்ட குழுவினருக்கு வழங்கிய நட்பு ரீதியான உபசரிப்பு மற்றும் இலங்கை மக்கள் வெளிப்படுத்திய அன்பான ஆதரவு குறித்தும் பாகிஸ்தான் அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, பிராந்தியத்திற்குள்ளும் வெளியிலும் ஒத்துழைப்புடன் செயற்படுவது பாகிஸ்தானின் நோக்கம் எனக் குறிப்பிட்ட தூதுக்குழுவினர், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு, தொழில் சந்தை மற்றும் சுற்றுலாத் துறை தொடர்பான விடயங்கள் குறித்து எதிர்காலத்தில் விரிவாகக் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் விஜயம் மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் வருகை ஆகியவை இலங்கைக்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.

இலங்கையின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தமைக்காக, ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், ‘டிட்வா’ புயல் உள்ளிட்ட இலங்கை மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாகிஸ்தான் வழங்கிய ஆதரவையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here