அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் கைப்பற்றல்

75
0
Spread the love

வவுனியா மாவட்டத்தில் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (16) முன்னெடுத்த விசேட சட்ட நடைமுறைப்படுத்தல் நடவடிக்கையின்போதே இந்த பேருந்துகள் கண்டறியப்பட்டன.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரனின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள், பறக்கும் படையினர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பறக்கும் படையினர்(flying scot) மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து செயல்பட்டனர்.
பொதுமக்கள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை பரிசோதித்து, உரிய அனுமதியின்றி இயங்கும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.
இதன்போது அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு பேருந்துகள் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பயணிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்கும் வகையில் மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், சேவை இடைநிறுத்தப்பட்டதால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பல பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இதேவேளை, கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த சுமார் ஐந்து பேருந்துகள் மாதவாச்சி பகுதியில் தங்கியுள்ளதாகவும், அவற்றிடம் உரிய வழித்தட அனுமதிப்பத்திரங்கள் இல்லாததால் வவுனியாவுக்குள் நுழைவதைத் தவிர்த்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அனுமதியின்றி இயங்கும் பேருந்துகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டால், அவை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் வரை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும். தற்போதைய நிலையில் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான மாற்றுப் பேருந்துகள் இல்லாததையும் கருத்திற்கொண்டு, விசேட நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
எனினும், அனுமதிப்பத்திரமின்றி இயங்கும் பேருந்துகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் கைவிடப்படவில்லை என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து உரிமையாளர்களும் மற்றும் இயக்குநர்களும் உடனடியாக அவ்வாறான சேவைகளை நிறுத்தி, தேவையான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களுடன் மட்டுமே பேருந்து சேவைகளை முன்னெடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பானதும் தடையற்றதுமான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த ஒத்துழைக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான விசேட சட்ட நடைமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here