சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அறநெறிக் கல்வியே வழி – பிரதியமைச்சர் பிரதீப்

24
0
Spread the love

ஒவ்வொரு ஊரிலும் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு, சிறுவர்களுக்கு முறையான அறநெறிக் கல்வி வழங்கப்படும் பட்சத்தில், எதிர்காலத்தில் சிறைச்சாலைகளுக்குச் செல்லும் கைதிகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடியும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
நல்லொழுக்கமும் விழுமியங்களும் கொண்ட மனிதர்களாக எமது பிள்ளைகளை உருவாக்குவதில் அறநெறிப் பாடசாலைகளின் பங்களிப்பு அளப்பரியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்து சமய அறநெறி மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா – 2025, நேற்று (16) கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதி அமைச்சர், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்து உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு மனிதன் மனிதனாகவும், விழுமிய பண்புகளைக் கொண்டவராகவும், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த பிரஜையாகவும் வளர்வதற்கு அறநெறிக் கல்வி மிகவும் அவசியமானதாகும்.
ஒழுக்கமுள்ளவராகவும், சமூகத்திற்குச் சேவை செய்யக்கூடியவராகவும், மனிதநேயம் கொண்டவராகவும் ஒரு பிள்ளை வளர்வதற்கு அறநெறிக் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பெற்றோரின் முக்கியமான கடமைகளில் ஒன்றாக தமது பிள்ளைகளை அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுப்புவதை கருத வேண்டும்.
அதேபோன்று, அறநெறிப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு பெரியளவிலான கொடுப்பனவுகள் எதுவும் கிடைப்பதில்லை. இருப்பினும், தமது ஏனைய பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் சமூகத்தின் எதிர்கால சந்ததியினருக்கு அறநெறிக் கல்வியை வழங்கி வருகின்றனர்.
எனவே, இவர்களை சாதாரண ஆசிரியர்கள் எனக் கருத முடியாது. இவர்கள் சமூகத்தை செதுக்கும் சிற்பிகள்” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்து சமயத்தின் தொன்மையையும் அதன் உண்மைத்தன்மையையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வது மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், இதற்காக அறநெறிக் கல்வியை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்து மக்களை வழிநடத்தக்கூடிய நேர்மையான தலைமைத்துவம் உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“யாரும் எம்மை விமர்சனம் செய்யக்கூடிய நிலைக்கு நாம் சென்றுவிடக் கூடாது. இதற்காக முழு இலங்கையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமைத்துவம் உருவாக வேண்டும். அதற்கான திறந்த அழைப்பை நான் விடுக்கிறேன்.
அனைவரும் ஒற்றுமையாகப் பயணிக்கும் போதுதான் எமது சமயத்தின் தொன்மையைப் பாதுகாக்க முடியும். இல்லையெனில், எதிர்காலத்தில் பல்வேறு விடயங்களில் இருந்து நாம் மறைந்து போகும் நிலை ஏற்படலாம்” எனவும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here