ஆசனப்பட்டி விவகாரத்தில் அத்துமீறிய ஐவர் – ஜனாதிபதியைத் திட்டியவர்களுக்குச் சிறை

127
0
Spread the love

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஆசனப்பட்டி இன்றி பேருந்தொன்றை அதிவேக வீதிக்குள் செலுத்த முயற்சித்தமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது.

குறித்த சந்தேகநபர்களை நாளை (20.02) வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் பேருந்தொன்றில் வந்த குழுவினர், ஆசனப்பட்டி விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதியை அவதூறாகத் திட்டியவாறும், பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நடந்துகொண்ட காணொளியொன்று கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.

இச்சம்பவம் தொடர்பான ஐந்து நபர்கள் பேலியகொடை போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கடான பொலிஸார் ஊடாக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய அவர்கள் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் அவர்களை அடையாள அணிவகுப்பிற்கும் உட்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற தினம் அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை காரணமாக, அவ்விடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில் குறித்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here