வருட இறுதிக்குள் மலையக வீடுகளை நிறைவு செய்ய பணிப்புரை

4
0
Spread the love

இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4,700 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டத்தை, இந்த ஆண்டின் இறுதிக்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய உதவியுடன் மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த மீளாய்வு கலந்துரையாடல், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த வீட்டுத் திட்டத்தின் கீழ், அனர்த்த அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்ட இடங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு 2,026 வீடுகள் வழங்கப்படவுள்ளன.

எஞ்சிய வீடுகள் பெருந்தோட்டத் துறையில் வசிக்கும் தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 22 பிராந்திய பெருந்தோட்டக் நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் வசிக்கும் மலையகக் குடும்பங்களுக்கும், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், ஜனவசம மற்றும் எல்கடுவ பெருந்தோட்டங்களின் கீழ் உள்ள தோட்டங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு வீட்டின் நிர்மாணப் பணிக்காகவும் இந்திய அரசாங்கம் 2.8 மில்லியன் ரூபாவையும், இலங்கை அரசாங்கம் 400,000 ரூபாவையும் பங்களிப்பாக வழங்கியுள்ளன.

இந்தக் கலந்துரையாடலின் போது, வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட காணிகளை எவ்வித தாமதமுமின்றி விடுவிக்குமாறும், திட்டத்திற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் காணத் தேவையான அறிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வழங்குமாறும் பிரபாத் சந்திரகீர்த்தி பணிப்புரை விடுத்தார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் இந்த வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here