MSEDO நிறுவனம் டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட 36 மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

510
0
Spread the love

மன்னார் மாவட்டத்தில் டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 36 மீனவ குடும்பங்களுக்கு இன்றைய தினம் (19.02), வியாழக்கிழமை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் தலா 15000 பெறுமதியான (MSEDO) மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய மெசிடோ நிறுவனத்தின் தலைவர்,

“இலங்கையினுடைய மூத்த குடிகளும் இலங்கையினுடைய பொருளாதாரத்தை தலைமை தாங்குகிறவர்களும் மீனவ சமூகத்தினர் தான். மீனவ சமூகம் என்பது இந்த நாட்டினுடைய சொத்து அவ்வாறான மீனவ சமூகத்தினர் தான் ஒவ்வொரு அனர்த்தங்களின் போதும் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் மீனவர்களுடைய பாதிப்பானது. அளவீடு செய்ய முடியாத வரையறைக்கு உட்படாதது.

நாங்கள் மன்னார் மாவட்ட நீரியல் வளத் திணைக்களத்தினருடன் கலந்துரையாடி தெரிவு செய்யப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ஐ.நா யு.என் வழங்கிய நிதியிலிருந்து இந்த சிறு தொகையான மீன்பிடி உபகரணங்களை வழங்குகிறோம்.

மீனவர்கள் ஆகிய நீங்கள் எங்களுடைய கடல் வளங்களை பாதுகாத்து நமது முன்னோர் நமக்கு விட்டுச் சென்றதைப் போல அடுத்த சந்ததியினருக்கும் விட்டு செல்ல வேண்டும் என்றார்.

இதன்போது மன்னார் மாவட்ட கடற் தொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தெரிவிக்கையில்,

இவ்வாறான நிறுவனங்கள் உங்களுக்கு உதவிகள் வழங்குவதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த மெசிடோ நிறுவனத்தினால் உங்களுக்கு வழங்கப்படுகிற வலை உபகரணங்களை வைத்து இழந்த வாழ்வாதாரத்தினை நீங்கள் கட்டி எழுப்ப வேண்டும்.
அதன் மூலம் நாட்டுக்கும் வருமானத்தை ஈட்டித் தர வேண்டும். தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பாவித்து மீன்படியில் ஈடுபடுவதால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். எனவே மீன்பிடியில் ஈடுபடுகிற நீங்கள் சட்டவிரோத முறை மூலம் மீன்பிடியில் ஈடுபடாமல் சரியான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு உங்களுடைய வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ, மன்னார் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரமேஷ் கண்ணா, மெசிடோ நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எஸ்.எஸ்.ஜான்சன் மற்றும் திட்ட இணைப்பாளர் பி.ஜூலியஸ், மற்றும் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் 36 பயனாளிகள் கலந்து கொண்டு மீன்பிடி உபகரணங்களை பெற்றுச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here