பாதாள உலக குழுவினருடன் தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள்

120
0
Spread the love

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20.02) பாராளுமன்றில் தெரிவித்தார்.

பத்மே உள்ளிட்ட சில சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவர்களிடம் இருந்த 30 தொலைபேசிகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது இந்தத் தகவல்கள் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

அதன்படி, குறித்த அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், முழுமையான விசாரணைகளின் பின்னர் இது குறித்த தெளிவான விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.

இது தொடர்பாக பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால,

“கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில பாதாள உலகச் செயற்பாட்டாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர், விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவர்கள் வசம் இருந்த 30 தொலைபேசிகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன.

அந்தத் தொலைபேசிகள் ஊடாகப் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலங்கள் மூலம் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

முழுமையான விசாரணையின் பின்னர் இது குறித்த தெளிவான அறிக்கையொன்றை வெளியிடுவோம். தற்போது விசாரணைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here