மன்னார், தாராபுரம் ஹுஸைனியா பள்ளிவாயிலில் புதிய ஹிப்ழ் (மனன பிரிவு) மத்ரஸாவினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (22.02) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் “பிள்ளைகள் என்பது இறைவன் தந்த சொத்து அவர்களைச் சரியாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு சரியான முறையில் இஸ்லாத்தை, ஈமானைக் கற்றுக் கொடுக்க வேண்டும். நல்ல கல்வி மற்றும் நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுத்தால் நாளை இந்த நாட்டில் நல்ல கல்விமான்களாக நல்ல வியாபாரிகளாக, ஒழுக்கமுள்ள நட் பிரஜைகளாக வளர்வார்கள் அதற்கு பெற்றோர்களாகிய உங்கள் தியாகமும் அர்ப்பணிப்பும் மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.
மாணவர்களிடையே கல்வி விழிப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில்
“இக்ராஹ் – ஓதுவீராக” என்ற தொனிப்பொருளில் இஸ்லாமிய நெறிமுறைகள், கல்வி விழுமியங்கள் மற்றும் சமூக ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில்,
ஹூஸைனியா பள்ளிவாயிலின் தலைவரும் முன்னாள் மாகாண இளைஞர் பணிப்பாளருமான என்.எம்.முனவ்பர் , மன்னார் மாவட்ட ஜமியதுல் உலமா சபை தலைவர் மௌலவி அஸீம், மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற சபை தவிசாளர், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட உலமாக்கள் ஊர்ப் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.







