ஆச்சார்ய மகாமண்டலேஷ்வர் சுவாமி கைலாசானந்தா குருஜி மற்றும் அவரது சீடர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இன்றைய தினம் மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (24.02) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மூன்று விசேட உலங்கு வானூர்திகளில் தள்ளாடி பகுதியில் வந்து இறங்கிய சுவாமிஜி, அவரது சீடர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் துணை இயக்குனர் சிந்தக்க லியன ஆராய்ச்சி உதவி இயக்குனர் நிதுனி சேனநாயக்க ஆகியோர் பொலிசாரின் பாதுகாப்புடன் வாகனங்களில் மன்னார் திருக்கேதீஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
பூஜை வழிபாடுகள் நடைபெற்று முடிந்த பின்னர் மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் தலைவர் இராமகிருஷ்ணன் ஐயா,மற்றும் பிரதம குருக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட சுவாமிஜி திருகேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றினை கேட்டு அறிந்தார் இதன் போது திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வரலாறு அடங்கிய புத்தகம் ஒன்றை ஆலய நிர்வாக சபைத் தலைவர் இராமகிருஷ்ணன் ஐயா சுவாமிஜியிடம் கையளித்தார்.
இன்று முதல் எதிர்வரும் 27ஆம் தேதி வரை இலங்கை முழுவதிலும் உள்ள ராமாயண பாதையில் சுவாமிஜி ஆன்மீக சுற்றுலாவை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமாயணக் காவியத்துடன் தொடர்புடைய காலத்தால் அழியாத தளங்கள் வழியாக சுவாமிஜியினால் மேற்கொள்ளப்படுகிற இந்த ஆன்மீகப் பயணம், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படும் ஆழமான கலாச்சார மற்றும் மதப் பிணைப்புகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது .







