பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தினை(PSTA) நீக்க கோரி ஊடகமாநாடு

98
0
Spread the love

இலங்கையில் ஏற்கனவே அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக கொண்டு வரவிருக்கும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தினை (PSTA) நீக்க கோரி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்(MSEDO) ஏற்பாட்டில் இன்றைய தினம் (28.02) சனிக்கிழமை ஊடக மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது.

குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட சட்டத்தரணி எஸ் டினேஷன் தெரிவிக்கையில்,

‘இலங்கையில் தற்போது பேசு பொருளாக காணப்படுவது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாகக் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலமாகும்.(PSTA) தற்போது இதுகுறித்து மக்களுடைய கருத்துக்களை கேட்டு அறிகின்ற செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றான சட்ட மூலத்தினை மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றனர் என்கிற செய்தியை மக்களுடன் சேர்ந்து பயணிக்கின்றவன் என்ற அடிப்படையில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏனெனில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருக்கின்ற அத்தனை அம்சங்களும் இந்த புதிய சட்டத்திலே உள்ளடக்கப்பட்டு இருக்கிறது. இலங்கையின் அரசியலமைப்பிலே அடிப்படை உரிமையைப் பாதிக்கின்ற வகையிலே இந்த புதிய சட்டம் அமைந்திருக்கிறது.

அரசியலமைப்பிலே ஒரு உறுப்புரையை மாற்ற வேண்டும் என்று சொன்னால் சர்வசன வாக்குரிமையை நடத்தி அதன் மூலமாக ஷரத்துக்கள் திருத்தப்பட முடியும்.
அப்படி இருக்க இந்த பயங்கரவாத தடைச் சட்டம் ஆனது இலங்கையினுடைய அடிப்படை உரிமையை கேள்விக்குட்படுத்துகின்றது.

இலங்கையின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையக் கொண்டுள்ள இந்த அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை கொண்டுவரும் பட்சத்தில் அது மக்களுடைய உணர்வுகளை புண்படுத்தக்கூடிய விடயமாக உள்ளது என்பதை நாங்கள் ஆணித்தரமாக குறிப்பிடுகின்றோம்.

அது மாத்திரமல்ல அது சர்வதேச ரீதியிலே அங்கீகரிக்கப்படாது.தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல பெரும்பான்மை மக்களும் எதிர்க்கின்ற இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் இலங்கைக்கு பொருத்தமற்றது.
ஏனென்று சொன்னால் தற்போது பயங்கரவாதம் இல்லாத ஒரு நாட்டிற்கு ஏன் இந்த சட்டம் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகின்றது. எனவே இந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் கொடுத்திருந்த வாக்குறுதிகளைப் பின்பற்றி பயங்கரவாத சட்டத்தினூடாக மக்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டினை நிறுத்த வேண்டும்.
எனவே இந்த சட்ட மூலத்தினை தமிழ் மக்களாகிய நாங்கள் எதிர்க்கின்றோம் என்ற செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

இதன்போது மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தெரிவிக்கையில்,

‘பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரக்கூடிய இந்த PSTA சட்டம் குறித்து மக்களுடைய கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக நீதி அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.
எனவே அதன் இறுதி நாளில் நாங்கள் எங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

வட கிழக்கிலிருந்து பயங்கரவாத தடைச் சட்டத்தினால் (PTA) பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரல் இந்த சட்டம் எங்களுக்கு வேண்டாம் எனத் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது அதனுடைய தொடர்ச்சியாக கொண்டு வருகின்ற PSTA அதுவும் எங்களுக்குத் தேவையில்லாத விடயம். சட்டத்தரணிகள் குழுவினாலும் இதற்கு எதிரான சமர்ப்பணங்கள் செய்யப்பட்டிருந்தது.

நாங்களும் எங்களுடைய எதிர்ப்பு கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறோம். இந்தச் சட்டமானது அரசைப் பாதுகாப்பதற்கே ஒழிய மக்களை பாதுகாப்பதற்கல்ல.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்பு தங்களுடைய தேர்தல் வாக்குறுதியிலே தெளிவாகச் சொல்லி இருந்தார்கள் எங்களுடைய ஆட்சி காலத்திலே பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவோம் என்று.

தற்போது அதனை விடக் கொடிய இந்த PSTA வை கொண்டு வருவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்வதற்காக இங்கே நாங்கள் ஒன்று கூடி இருக்கிறோம் என்றார்.

குறித்த நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் கலந்து கொண்டனர் .

இதே வேளை மெசிடோ நிறுவனத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைப்பதற்காக PTA மற்றும் PSTA இரண்டுமே எங்களுக்கு வேண்டாம் என்று குறிப்பிடப்பட்ட அஞ்சலட்டைகளில் பொது மக்களின் கையெழுத்துப் பெறும் நிகழ்வும் இன்று காலை மன்னார் பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here