நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம் எங்களைப் பாதிக்கிறது

176
0
Spread the love

“நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம் 2025” தங்களது சமூக மட்ட சேமிப்பு மற்றும் கடன் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனக் குற்றம்சாட்டி, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சுயஉதவி குழுப் பெண்கள் இன்று (03.03) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த சட்டம் தொடர்பாக மீளாய்வு செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்குமாறு மன்னார் மாவட்டச் செயலாளரிடம் மனு ஒன்றையும் அவர்கள் கையளித்தனர்.

குறித்த மனுவில் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாங்கள் பல ஆண்டுகளாக சமூக மட்டத்தில் சுய உதவிக் குழுக்களாக செயற்பட்டு சேமிப்பு மற்றும் பிணையமில்லா கடன் வழங்கலில் ஈடுபட்டு வருகின்றோம். “கடன் பெறத் தகுதியற்றவர்கள்” என கருதப்படும் பெண்களுக்கும் கடன் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தையும் கண்ணியத்தையும் மீட்டெடுக்க உதவி செய்து வருகின்றோம்.
சுயஉதவிக் குழுக்கள் நிதி சேவைகளை மட்டுமன்றி, பரஸ்பர ஆதரவு மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கான பாதுகாப்பான தளமாகவும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், அமுலுக்கு வரவுள்ள “நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தினால்
சமூக மட்ட சேமிப்பு மற்றும் கடன் நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு
சமூக சேமிப்பு, மற்றும் பிணையமில்லா கடன்களை கட்டுப்படுத்துகிறது.

மற்றும் பெண்களை தனியார் நுண்நிதி நிறுவனங்களின் மீது சார்ந்த நிலைக்கு தள்ளுகிறது
குடும்ப மற்றும் சமூக மட்டத்தில் பெண்களின் அதிகாரமளிப்பை தடை செய்கிறது
சுயஉதவி குழுக்களின் சுயாட்சியை பாதிக்கிறது
கிராமிய சேமிப்புகளையும் அவசர நிதி உதவிகளையும் ஆபத்துக்குள் தள்ளுகிறது.

24மணி நேர அவசர நிதி சேவைகளைப் பெறும் வாய்ப்பை குறைக்கிறது
உள்ளூர் பொருளாதாரத்தில் பணச் சுழற்சியைத் தடை செய்கிறது
சட்டவிரோத பணக்கடன் வழங்குநர்களை நாடும் நிலையை உருவாக்கக்கூடும்
என அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு ,
நாங்கள் இச்சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் சமூக மட்ட சேமிப்பு வசதிகள் இல்லாமல் ஏழை மக்களும் குறிப்பாக பெண்களும் எதிர்கொள்ள வேண்டிய அவலநிலையை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்” என குறித்த மனுவில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,மன்னார் சமூக மட்ட அமைப்புகள் மற்றும் மன்னார் மாவட்ட சுய உதவி குழுக்களை சேர்ந்த சுமார் 75 பெண்கள் பங்கேற்று இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here