மன்னார் மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

193
0
Spread the love

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (06.03) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில்,

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அடையாளம் காணப்பட்டுள்ள 49 சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் 10 சுற்றுலா தலங்களைக் கூடிய விரைவில் அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, சுற்றுலாத்தலங்களுக்கான போக்குவரத்து வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் போன்றவற்றை மேம்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன்
சில சுற்றுலா தளங்களுக்கான சேவைகளை ஆரம்பிப்பதில் உள்ள தடைகள் குறித்தும் ஆராயடப்பட்டது.

இதன்போது .மாவட்டச் செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க,

வட மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் யசோதரா
வடமாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், வவுனியா பல்கலைக்கழக வியாபார கற்கைகள் பீடத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சுற்றுலா திட்டங்கள் குறித்து விபரித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்,

முக்கியமாக அடையாளம் காணப்பட்டுள்ள 10 சுற்றுலா தலங்களில் தடைகள் ஏதுமில்லாத இடங்களில் உடனடியாக சுற்றுலா சேவைகளை ஆரம்பிக்குமாறும், சுற்றுலா பயணங்களை ஆரம்பிப்பதில் தடைகள் உள்ள இடங்கள் தொடர்பாக உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி, எதிர்வரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கலந்துரையாடி, வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில்,வட மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் ,மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள்,மன்னார் நகர சபை தவிசாளர், பிரதேச சபை தவிசாளர்கள், தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், பங்குதாரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here