செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் அடுத்த மாதம்

54
0
Spread the love

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்று (12.03) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது, புதைகுழியை சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டுள்ளது.

அத்துடன் புதைகுழி பகுதியில் அகழ்வு பணிகளில் ஈடுபடுவர்களுக்காக மற்றும் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகள் டிட்வா புயல்,  தொடர்ந்து யாழில் பெய்த பருவ மழை காரணமாக சேதமடைந்துள்ளன.

அவற்றினை அங்கிருந்து அகற்றி, புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வு பணிகளுக்கான தளபாடங்களை கடந்த அகழ்வு பணிகளுக்கு ஏற்பாடு செய்தது போன்று நல்லூர் பிரதேச சபை இம்முறையும் தளபாட வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய மன்று கட்டளையிட்டது.

புதைக்குழி பகுதிக்கு நேரில் சென்று கள தரிசிப்பை மேற்கொள்வது என்றும் மன்றில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய நீதவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ரணித்தா, நல்லூர் பிரதே சபை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் சென்று புதைகுழியை பார்வையிட்டனர்.

இதன்போது புதைகுழிக்குள் தற்போதும் நீர் தேங்கி நிற்பதனால் எதிர்வரும் 28 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் நீரினை வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும், ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றில் எடுக்கப்படும் எனவும், ஏப்ரல் 20 ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது எனவும் திகதிகள் இடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here