அமெரிக்கா முழுவதும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப் (Donald Trump) தலைமையிலான நிர்வாகத்திற்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
நியூயோர்க், வொஷிங்டன், லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு, அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்கள், முன்பு மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற “மன்னர்கள் வேண்டாம்” என்ற இயக்கத்தின் மூன்றாவது கட்டமாகக் கருதப்படுகின்றன.
போராட்டக்காரர்கள் தெரிவித்ததாவது, ஈரானுடன் ஏற்பட்டுள்ள பதற்றம், கூட்டாட்சி குடியேற்ற சட்டங்களை கடுமையாக அமல்படுத்தும் நடவடிக்கைகள், மேலும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு போன்றவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த காரணங்களாலேயே நாடு முழுவதும் எதிர்ப்பு அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் Trump மற்றும் துணை ஜனாதிபதி J. D. Vance உள்ளிட்ட நிர்வாக தலைவர்களின் உருவப்பொம்மைகளை ஏந்தி, அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும், சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும் என கோஷங்களை எழுப்பியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெறுகின்றன என்றாலும், சில இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.







