மத்திய பிலிப்பைன்ஸில் பதிவான 6.9 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சுமார் 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செபு நகரின் (Cebu City) கடலோரப் பகுதியில் நேற்று (30.09) உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் கட்டிடங்களும் சேதமடைந்தன.
செபு நகரம், போகோ (Bogo) நகரம் மற்றும் பிற பாதிக்கப்பட்ட நகரங்கள், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக ‘அவசரகால நிலையை’ பிரகடனப்படுத்தியுள்ளன.
விசயாஸ் (Visayas) பிராந்தியத்தில் அமைந்துள்ள செபு நகரின் மக்கள் தொகை சுமார் 1 மில்லியனாகும்.
இதனிடையே, பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம் முன்னர் விடுக்கப்பட்ட ஆழிப்பேரலை எச்சரிக்கையை ரத்து செய்துள்ளது.







