மத்திய கிழக்கு மோதலில் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு – சஜித் கூறுவது என்ன?

102
0
Spread the love

தற்போது மத்திய கிழக்கு யுத்தம் தீவிரமடைந்து, யேமனின் வடமேற்கு பகுதியையும் சனா நகரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதி அமைப்பினர் மத்திய கிழக்கு போரில் புதிதாக நேரடியாக தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் இலங்கைக்கு பல்வேறு கோணங்களில் கடுமையான தாக்கங்கள் நேரடியாக ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (29.03) விசேட உரையொன்றினை முன்வைத்து தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், பாப் அல் மந்தாப் நீரிணை வழியில் ஹூதி அமைப்பினர் போர் களத்திற்கு வருவதால் பல தாக்கங்கள் நமது நாட்டில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நீரிணை என்பது செங்கடல், மத்திய தரைக்கடல், அரேபியக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய அனைத்தையும் இணைக்கும் இடமாக காணப்படுவதனால், இந்த நீரிணை வழியாக நடைபெறும் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதனால் எண்ணெய் விலை உயர்வு, கடல் வழி சரக்குகள் போக்குவரத்தில் தாமதங்கள் போன்றன ஏற்படலாம்.

இதனால் போக்குவரத்து கட்டணம், மின்சார கட்டணம் அதிகரித்து அன்றாட வாழ்க்கைச் செலவுகளும் அதிகரிக்கலாம்.

பாப் அல் மந்தாப் நீரிணையைத் தவிர்த்துச் செல்ல வேண்டுமெனில் நன்னம்பிக்கை முனையை பாறைக் குடாவைக் கடந்து செல்ல வேண்டும். இதனால் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு கட்டணங்கள் அதிகரிக்கும். போர் அபாயக் கட்டணங்கள் கூட அதிகரித்து கடுமையான தாக்கங்கள் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இறக்குமதி செலவுகளும் அதிகரித்து, ஏற்றுமதி இலாப விகிதங்கள் கூட குறையலாம். நமது பொருட்களை வாங்குவோர் வேறு விநியோகஸ்தர்களை தேடுவதால் போட்டித்தன்மை காரணமாக அபாயங்கள் ஏற்படலாம்.

இந்த ஹூதி தாக்குதல்கள் மூலம் நமது நாடு எதிர்காலத்தில் அதிக செலவுகளை ஏற்க வேண்டியிருக்கும் என்பதால் அரசாங்கம் இதுகுறித்து உடனடி செயல்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த நீரிணை மூடப்படுவதனால் ஏற்படும் பாதிப்பிற்கு அரசிடம் மாற்று செயற்திட்டம் அமைந்து காணப்பட வேண்டும். அரசாங்கம் இவற்றிற்கு தீர்வுகளை கொண்டிருக்க வேண்டும்.

இந்த சவால்களை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் செயற்றிட்டமொன்று காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here