யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில், சுயாதீன சர்வதேச தடயவியல் விசாரணையை காலக்கெடுவுடன் முன்னெடுக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
செம்மணி மற்றும் சித்துபாத்தி பகுதிகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்பில், போதிய ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படாத இயற்கைப் பேரிடர் அல்லது தொற்றுநோய் குறித்த அனுமானங்களை முன்வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த இடைக்கால சுருக்க அறிக்கையில் உள்ள சில கருத்துகள் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகப் பேரவை தெரிவித்துள்ளது.
புதைகுழியில் அதிக எண்ணிக்கையிலான உடல்கள் காணப்படுவதால், அவை தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு குறித்து அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதேவேளை, அதிகளவிலான ஆடைகள் கண்டறியப்படாதமை அவை காலப்போக்கில் சிதைந்திருக்கலாம் என்பதுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது.
இந்தக் கருத்துகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, செம்மணி புதைகுழியில் இதுவரை 583 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் எச்சங்களும் அடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. பாடசாலைப் புத்தகப்பைகள், பால் போத்தல்கள் மற்றும் பொம்மைகள் போன்ற பொருட்களும் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பேராசிரியர் ராஜ் சோமதேவவின் முதன்மை நிபுணத்துவம் குடியேற்றகால மற்றும் சூழலியல் தொல்லியல் துறையுடன் தொடர்புடையது என்பதால், தடயவியல் தொல்லியல் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற நிபுணர்களின் பங்களிப்பும் அவசியம் எனப் பேரவை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தகைய அனுமானங்கள் உண்மையைக் கண்டறியும் முயற்சியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பக்கூடும் என்றும் அது அச்சம் வெளியிட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அண்மைய அறிக்கையிலும், உடல்கள் ஆடைகளின்றியும் ஒழுங்கற்ற முறையிலும் புதைக்கப்பட்டிருப்பது தொடர்பாகக் கவலைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகப் பேரவை குறிப்பிட்டுள்ளது. இத்தகைய நிலைமைகள் குற்றச்செயல்கள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளைக் கண்டறிந்து, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் மானுடவியலாளர்கள் பங்கேற்கும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட தொல்லியல் அறிக்கையை சர்வதேச சுயாதீன நிபுணர் குழுவொன்று மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.







