யாழ்ப்பாணம் பலாலியில் தமது பூர்வீக நிலங்களையும் வீடுகளையும் விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம், கடும் மழைக்கு மத்தியிலும் 19ஆவது வாரமாகத் தொடர்கிறது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை மீளக் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, பலாலி பகுதி மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 25) கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கடந்த 36 ஆண்டுகளாகத் தமது சொந்த நிலங்களிலிருந்து விலகி வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கும் மக்கள், தங்களது வீடுகளையும் காணிகளையும் மீளப் பெற்றுக்கொண்டு சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது காணிகள் இராணுவத்தின் வசமுள்ள நிலையில், அங்கு விவசாய நடவடிக்கைகளும் வர்த்தகச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தங்களுக்குச் சொந்தமான நிலங்களை மீள ஒப்படைத்து, நீண்டகால இடப்பெயர்வுக்கு முடிவுகட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
காலநிலை சவால்களையும் எதிர்கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்து வரும் மக்கள், தமது பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்படும் வரை கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.







