ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிகாண் ஹாக்கி தொடரின் ஆரம்பச் சுற்றுப் போட்டியில், பலம் வாய்ந்த பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி நேற்று (3) ஒரு போராட்ட வெற்றியைப் பதிவு செய்தது.
இலங்கை ஆண்கள் ஹாக்கி அணி ஒன்று, பங்களாதேஷிற்கு எதிராக 20 வருடங்களுக்குப் பிறகு ஈட்டிய ஹாக்கி வெற்றியாக இது சாதனையில் இணைந்துள்ளது.
தாய்லாந்தில் நடைபெற்று வரும் இத்தொடரில் இலங்கை அணி ‘பி’ (Group B) பிரிவின் கீழ் போட்டியிடுகிறது.
இதன்படி, இலங்கை அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி நடைபெற்ற தனது முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி எளிதாகத் தோற்கடித்ததுடன், தற்போது தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
ஆரம்பச் சுற்றில் இலங்கை அணி மோதும் இறுதிப் போட்டி நாளை மறுதினம் (6) சீன தைபே அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.
இத்தொடரில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது







