ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான பகுதியில் நபர் ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று (17) நள்ளிரவு பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரவான, உஸ்பீம் ஜனபதய பகுதியிலுள்ள ‘டிஜே வத்த’ எனும் இடத்தில் குழுவொன்று ரகளையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலையடுத்து, அது குறித்து ஆராய்வதற்காக சம்பத் அத்துகோரள அங்கு சென்றுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த நபர் ஒருவர் அவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இத்தாக்குதலில் காயமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, காலி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







