கடற்தொழில் சட்டம் மற்றும் கடல்வள பாதுகாப்பு தொடர்பாட விழிப்புணர்வுக் கலந்துரையாடல் ஒன்று நேற்று (17.04) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக ஜெய்க்கா மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் பொருளாதாரா அபிவிருத்தி மேம்பாட்டுக்கான நிறுவத்தின்(MSEDO) ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கடல் வள ஆராய்ச்சி மாணவர் எஸ்.திவ்யன் வளவாளராகக் கலந்துகொண்டார்.
குறித்த கலந்துரையாடலில், கடலை மாசுபடுத்துவதால் கடல்வாழ் உயிரினங்கள் இறத்தல், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரண பாவனையால் மீன்வளம் குறைதல், மீனவர்களினால் கடலில் கைவிடப்பட்ட வலைகளில் அகப்பட்டு மீன்கள் இறத்தல், மக்கள் கழிவுகளை கடற்கரைகளில் கொட்டுதலால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் தீமைகள், மற்றும் காலநிலை காரணமாக கடல் தாவரங்கள் அழிவடைந்து வருதல் போன்ற விடயங்கள் வளவாளரினால் காணொளிகள் மற்றும் படங்கள் மூலம் மீனவர்களுக்கு விபரித்து காண்பிக்கப்பட்டது.அத்துடன் கடல் வளங்களை பாதுகாப்பதற்குரிய யோசனைகள், மீன்பிடி தொடர்பான சட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலினை ஏற்பாடு செய்ததன் நோக்கம் குறித்து, மெஸிடோ(MSEDO) நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தெரிவிக்கையில், இந்த உலகையே கண்டுபிடித்தது மீனவ சமூகத்தினர் தான் என அனைவரும் சொல்வார்கள்.
மீனவர்கள் தான் அக்காலத்தில் படகோட்டிகள் மூலம் பல நாடுகளைக் கண்டுபிடித்தார்கள். மீனவ சமூகத்தின் குரல் என்பது மிகவும் பெறுமதியானது.ஆனால் துரதிஷ்டவசமாக எமது நாட்டில் மீனவர்களுக்கான சலுகைகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
ஆனாலும் மீனவ சமூகம் நாட்டின் பொருளாதாரத்திற்கு தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வருகின்றது.அந்த வகையில் எங்களுடைய கடல் வளத்தை நாங்களே பாதுகாக்க வேண்டும் எங்களுடைய வளங்களுக்கு நாங்களே சொந்தக்காரர்கள்.
உலகில் இல்லாத அனைத்து மீன் வளங்களும் எமது மன்னார் வளைகுடாவில் தான் உள்ளது, மன்னார் மாவட்டத்தைப் பல அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்தது எங்களுடைய பவளப்பாறைகள் மற்றும் மணற் தீடைகள் தான் எனவே அதனைப் பயனுள்ளதாகவும் தூய்மையாகவும் பெறுமதி மிக்கதாகவும் பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு வழங்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது.
அந்த வளங்களைப் பாதுகாக்கும் நிமித்தமாக இன்றைய நாளில் மீன்பிடி முறைகள், மீன்பிடி சட்டதிட்டங்கள் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்காக இக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மெஸிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ, திட்ட முகாமையாளர் எஸ்.எஸ். ஜான்சன் திட்ட இணைப்பாளர் பி. ஜூலியஸ்,மன்னார் மீனவ சங்க சமாச உறுப்பினர்கள், மீனவ சமூகத்தின் பிரதிநிதிகள். இளம் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







