புத்தளம் நகரில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை

35
0
Spread the love

புத்தளம் நகரில் அண்மைக்காலமாக சடுதியாக அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைக்கு எதிராக,  வெள்ளிக்கிழமை நாகூர் ஜும்மா பள்ளிவாசல் பகுதியில் பாரிய மக்கள் எழுச்சிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உலமாக்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

புத்தளத்தின் முக்கிய அமைப்புகளான புத்தளம் ஜம்மிய்யதுல் உலமா, புத்தளம் பெரிய பள்ளிவாசல் மற்றும் புத்தளம் மாநகர சபை ஆகிய புத்தளம் முக்கூட்டு அமைப்பு இணைந்து குறித்த போதை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

புத்தளம் நகரில், குறிப்பாக நாகூர் பள்ளிவாசல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளின் புழக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக பாடசாலை செல்லும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஒரு பாதுகாப்பற்ற சூழலை உணர்வதாகவும், பெண்கள் ஒரு அச்சத்துடனே வெளியே சென்று தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய ஒரு மோசமான சூழல் உருவாகியுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் “போதையற்ற நாட்டை உருவாக்குவோம்” எனும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலும், புத்தளம் பொலிஸாரின் ஆலோசனைகளுக்கு இணங்கவும் இந்த எதிர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“எமது பிரதேசத்தைப் போதையில் இருந்து மீட்டெடுக்க வேண்டுமானால், சட்ட அமுலாக்கத் துறையினருடன் பொதுமக்களும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்,” என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கண்டனப் பேரணியில் புத்தளம் மாநகர முதல்வர் திரு. ரின்சாத் அஹமத், புத்தளம் ஜம்மிய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெக் மெளலவி ஜிப்னாஸ், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர், மாநகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பிரதேச மக்கள் எனப் பெருந்திரளானோர் திரண்டு போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராகக் குரலெழுப்பினர்.

புத்தளம் மண்ணில் இருந்து போதைப்பொருள் எனும் அரக்கனை முற்றாக ஒழிக்கும் வரை இவ்வாறான விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் என அமைப்பாளர்கள் இதன்போது உறுதியளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here