எரிபொருள் விலை அதிகரிப்பு – பஸ் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

2
0
Spread the love

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய நேற்று (02) எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், அந்த மாற்றத்தை தற்போதைக்கு பேருந்து கட்டண திருத்தத்தில் பயன்படுத்த முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (03.05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், திருத்தப்பட்ட விலையை உடனடியாக கட்டணங்களில் பிரதிபலிக்கச் செய்ய முடியாது என்றாலும், தற்போதைய நிலையில் பேருந்து உரிமையாளர்கள் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன் விளைவாக, எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்படும் நட்டத்தை பேருந்து உரிமையாளர்களே சுமக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் ஒரு நாளைக்கு சுமார் 500 ரூபாய் நட்டமடைகின்றன.

தூர இடங்களுக்கான சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் ஒரு நாளைக்கு சுமார் 1,500 ரூபாய் வரை நட்டத்தை எதிர்நோக்குகின்றன.

ஜூலை முதலாம் திகதி வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், ஏனைய செலவுகளும் அதில் சேர்க்கப்படும் எனத் தெரிவித்த அவர், தற்போது டீசல் விலை 10 ரூபாயினால் அதிகரித்துள்ள போதிலும், இந்த தருணத்தில் கட்டண திருத்தத்தை கோருவதற்கு பேருந்து உரிமையாளர்களுக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

எனினும், எரிபொருள் விலை அதிகரிப்பு பேருந்து தொழில்துறையின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், எரிபொருளின் தரம் குறித்தும் பாரிய சிக்கல் நிலவுவதாகக் குறிப்பிட்டார். எரிபொருளின் தரம் குறைந்துள்ளதால், எரிபொருள் தகனம் அதிகரித்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை முன்வைத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, எரிபொருளின் தரம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இலங்கையில் எரிபொருள் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் கொண்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முடிவுகளில் திருப்தி இல்லாததால், எதிர்காலத்தில் சிங்கப்பூரின் உதவியுடன் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என அவர் யோசனை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here