காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான விசேட செயலமர்வு

86
0
Spread the love

காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான விசேட செயலமர்வு ஒன்று இன்று ( 09.05) சனிக்கிழமை காலை 10.00 மணியளவில்  மன்னார் மாவட்டச் செயலக நெய்தல் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது அதிக முக்கியத்துவம் பெறும் காணி தொடர்பான சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் நிர்வாக செயல்முறைகள் குறித்து சிவில் சமூகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் நோக்கில் மெசிடோ (MSEDO) நிறுவனத்தினால் அதன் தலைவர் யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இச்செயலமர்வில் , மன்னார் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் சிவில் சமூக அமைப்புகள், சமூகமட்ட அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்கள், கிராமமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், காணி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், காணி உரிமை பெற விண்ணப்பித்தவர்கள், பலவந்தமாக காணிகளை இழந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்று  தாங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் வளவாளராக, முன்னாள் கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் கலந்துகொண்டு  காணி உரிமை தொடர்பான புதிய சட்டங்கள், சுற்றறிக்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து தெளிவூட்டினார்.

இதன்போது அரச காணி என்றால் என்ன?

அரச காணிகளை எவ்வாறு அடையாளம் காணுவது?

அரச காணிகளுக்கான சட்டபூர்வ ஆவணங்கள் எவை?

அரசு அதிகாரிகள் அரச காணிகளை வைத்திருக்க முடியுமா?

காணி உரிமை ஆவணங்கள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்களைப் பெறும் நடைமுறைகள் குத்தகை (Lease) அடிப்படையில் காணி பெறுவதற்கான தகுதிகள்

“காணி அற்றவர்” என்பவர் யார்?

காணி உரிம வகைகள் மற்றும் உரிமை மாற்ற நடைமுறைகள்,அரச காணி வழங்கப்படும் போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குத்தகை முறையில் காணி பெற்றுக்கொள்வது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி மற்றும் நிர்வாக செயல்முறைகள் மேலும், காணி தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது.

காணி தொடர்பான சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் அரச நிர்வாக செயல்முறைகள் குறித்த அறிவை பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு வழங்குவதுடன், காணி பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவதற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் மெசிடோ (MSEDO) நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த செயலமர்விற்கான , நிதி அனுசரணையை UNOPS நிறுவனம் வழங்கியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here