சீன அரசாங்கத்தினால் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக பொருத்து வீடுகள் நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட வங்காலை கிராமத்தில் இன்று (26.05) செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்விலே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் கலந்து கொண்டு வீடுகளை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
மேலும் இந் நிகழ்வில் , நானாட்டான் பிரதேச செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு, மீன்பிடி,மற்றும் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளர் ரமேஷ் கண்ணா, மன்னார் மாவட்டச் செயலக திட்டமிடற் பணிப்பாளர் எச்.ஹலீம்தீன், உதவித் திட்டமிடற் பணிப்பாளர் வோல்டி சொய்சா, ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்
கடந்த 2024 ஆம் ஆண்டு சீன அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கென தற்காலிக பொருத்து வீடுகள் வழங்கப்பட்டிருந்தன.
இதில் மன்னாருக்கு 64 வீடுகள்வழங்கப்பட்டிருந்தன. இவ் வீடுகள் பொருத்தும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. அந்த வீடுகளுக்கான அடித்தளம் அமைப்பதற்காக 38 வீடுகள் ராணுவத்தினரிடமும் 26 வீடுகள் கடற்படையினரிடமும் மேடை அமைக்கும் பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தன இந்நிலையில் 28 வீடுகள் முழுதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த பொருத்து வீடுகளுக்கான மேடைகளை அமைப்பதற்காக அரசாங்கத்தினால் தலா 75,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுடன் அதைக் கட்டி முடிக்கும் பணியை இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் இலவசமாக மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .







