மன்னாரில் கால்நடை பண்ணையாளர்களுடன் விசேட கலந்துரையாடல்

28
0
Spread the love

மன்னார் மாவட்டத்தில் மாட்டிறைச்சி விற்பனை விலையை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அமைய நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மாவட்டச் செயலாளர் தலைமையில் நேற்று (09) இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது, தாங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாட்டிறைச்சியை விற்பனை செய்யத் தயாராக இருப்பினும், பண்ணையாளர்களிடமிருந்து மாடுகளை கிலோகிராம் ஒன்றுக்கு 1,700 ரூபா விலையில் பெற்றுக்கொள்ள முடியவில்லை என இறைச்சிக் கடை உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் கால்நடை பண்ணையாளர்களின் நிலைப்பாட்டை அறியும் நோக்கில் அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (10.06) புதன்கிழமை மாலை கால்நடை பண்ணை உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பண்ணையாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர். குறிப்பாக கால்நடை வளர்ப்பில் ஏற்படும் சிரமங்கள், மேய்ச்சல் தரைப் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை, கால்நடைகள் உயிரிழக்கும் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரச அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

அதேவேளை,தங்களுடைய கால்நடைகளை கிலோ ஒன்று 1700 ரூபாவிற்கு இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும்
தற்போது அதைவிடக் குறைந்த விலைகளிலேயே தாங்கள் மாடுகளை விற்பனை செய்து வருவதாகவும், 1,700 ரூபா என்பது நியாயமான விலை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். அந்த விலைக்கு தங்களது மாடுகளை விற்பனை செய்ய எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

மேலும், நேற்றைய தினத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி
எதிர்வரும் நவம்பர் மாதம் வரை மாடுகளை வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்ய முடியாது என்ற தடையினை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் இத்தகைய கட்டுப்பாடுகள் தங்களது வாழ்வாதாரத்தையும் கால்நடைப் பண்ணைத் தொழிலையும் பாதிப்பதாக வும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த அரசாங்க அதிபர் வெளிமாவட்டங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது தடை என நேற்றைய தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பொதுத் தீர்மானம் தளர்த்தப்பட்டு, கால்நடைகளை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வது தொடர்பில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால்
நடைமுறைப்படுத்தப்படுகின்ற உள்ளக கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனத் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களப் பிரதி பணிப்பாளர் சி.பி.வின்சன்
கால்நடை வைத்தியர்கள் மன்னார் நகரசபை தவிசாளர், மாந்தை மேற்கு பிரதேசசபை தவிசாளர், மற்றும் கால்நடை பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here